ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு தேர்வை 13 லட்சத்து 66 ஆயிரத்து 945 பேர் மட்டுமே எழுதினர். இவர்களில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 586 பேர் மாணவர்கள். 8 லட்சத்து 80 ஆயிரத்து 843 பேர் மாணவியர். 6 பேர் மாற்று பாலினத்தை சேர்ந்தவர்கள். இந்த தேர்வு நாடு முழுவதும் 155 நகரங்களில் அமைக்கப்பட்ட 3,862 மையங்களில் நடந்தது. தேர்வை கண்காணிக்க நாடு முழுவதும் 2 லட்சத்து 66 ஆயிரத்து 240 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. 11 மொழிகளில் தேர்வு நடந்தது. ஆங்கில மொழியில் தேர்வு எழுத 12 லட்சத்து 63 ஆயிரத்து 773 பேர் பதிவு செய்திருந்தனர். தமிழ் மொழியில் தேர்வு எழுத 17 ஆயிரத்து 101 பேர் பதிவு செய்திருந்தனர். ஒட்டு மொத்தமாக பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதுவதற்காக ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 763 பேர் பதிவு செய்திருந்தனர். தமிழகத்தைப் பொறுத்தமட்டில், இத்தேர்வை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 617 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 70 ஆயிரத்து 610 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
இந்நிலையில், இத்தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இதில், நாடு முழுவதிலும் 7 லட்சத்து 71 ஆயிரத்து 500 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 556 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 27 ஆயிரத்து 943 பேர் பெண்கள். தேசிய அளவில் ஒடிசாவை சேர்ந்த மாணவர் சோயிப் அப்தாப்பும், டெல்லியை சேர்ந்த அகன்கா சிங்கும் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தனர். நீட் நுழைவுத்தேர்வில் இதுபோல் 100 சதவீத மதிப்பெண் பெறப்பட்டது இதுவே முதல் முறை. இத்தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 57 ஆயிரத்து 215 பேர் தேர்ச்சி பெற்றனர்இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே ஏராளமானோர் பார்க்க முயன்றதால், தேசிய தேர்வு முகமையின் இணையதளம் முடங்கியது. ஒரு சில மணி நேரத்துக்குப் பிறகே அது சீரானது. இந்நிலையில், தேர்வு முடிவு புள்ளி விவரங்களில் மிகப்பெரிய அளவில் குளறுபடிகள் ஏற்பட்டு இருப்பதாக நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பிறகு தெரிந்தது.
குறிப்பாக, திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களின் முடிவுகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. திரிபுராவில் மொத்தமாக 3,536 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். ஆனால், இம்மாநிலத்தில் 88 ஆயிரத்து 889 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல், தெலங்கானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரகாண்ட் மாநில தேர்வு முடிவுகளிலும் குளறுபடி ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், முடிவு வெளியிடப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து அது நீக்கப்பட்டது. பின்னர், இந்த குளறுபடிகள் சரி செய்யப்பட்டு மீண்டும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த குளறுபடிகளால் மாணவர்கள், பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வை நன்றாக எழுதிய பல ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்து இருப்பதாகவும், சரியாக தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டதிலும் தவறுகள் நடந்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
7.5% இடஒதுக்கீடு வழங்கினால் 350 பேருக்கு சீட் கிடைக்கும்
கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநர் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆளுநர் இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்தால், தமிழகத்தை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
மறுதேர்வு நடத்தப்படுமா?
நீட் தேர்வு முடிவில் பல்வேறு குழப்பங்கள், குளறுபடிகள் நடந்துள்ள நிலையில். கோச்சிங் சென்டர்களில் படித்து தேர்வு எழுதியவர்களுக்கு எந்தவித குழப்பமும், பிரச்னையும் ஏற்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எனவே, இந்த தேர்வை மீண்டும் முறையாக நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் சமூக நல ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
விடைத்தாள்கள் மாற்றப்பட்டதா? மாணவர்கள் அடுக்கும் புகார்கள்
* தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய பல மாணவர்கள், பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். அவற்றின் விவரம் வருமாறு:
* பல பேரின் விடைத்தாள்கள் மாற்றப்பட்டு உள்ளதாகவும், விடைகள் அவர்கள் குறிப்பிட்டதை விட தவறாகவும், வேறு மாதிரியாகவும் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
* இன்னும் சிலருக்கு விடை குறிப்பில், ஒரே குறிப்பிட்ட எண்ணுக்கான விடைகள் குறிப்பிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சிலருக்கு அவர்களுடைய விடைத்தாள்கள் ஓஎம்ஆர் தாள் மாறி உள்ளதாகவும் பல புகார்கள் வந்துள்ளன.
* கொரோனா அச்சுறுத்தலால் முதலில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கான மறுதேர்வு, கடந்த 14ம் தேதி நடத்தப்பட்டதில் இடம் பெற்ற கேள்வித்தாள் மிக எளிதாக இருந்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். ஆனால், தேர்வு முடிவில் பலருக்கு மதிப்பெண் குறைவாகவே வந்துள்ளது. பலருடைய விடைத்தாள்கள் அவர்களின் சொந்த விடைத்தாள்கள் இல்லை என்று மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
* இன்னும் சில மாநிலங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை கூடுதலாகவும், தேசிய தேர்வு முகமை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதனால், இந்த நீட் தேர்வில் மாபெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
‘680 கிடைக்கும் என நினைத்தேன் 37 மார்க் மட்டுமே கிடைத்துள்ளது’
அரியலூர் மாவட்டம், தத்தனூர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராணி மகள் மஞ்சு (19). இவர், நீட் தேர்வை நாகை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஒரு பள்ளியில் எழுதியுள்ளார். இந்நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இதில் மாணவி மஞ்சு 720க்கு வெறும் 37 மதிப்பெண் பெற்றுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், ‘‘3 கேள்விகளுக்கு மட்டுமே நான் பதில் எழுதாமல் விட்டேன். எனக்கு 680 மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் வெறும் 37 மதிப்பெண் கிடைத்துள்ளது. இது நீட் தேர்வு முகமையின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 கேள்விகளுக்கு பதிலளிக்காத நிலையில், 7 கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், ஓஎம்ஆர் தாளை மாற்றியிருக்கலாம் என எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது,’’ என குற்றம் சாட்டியுள்ளார்.">அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனைதமிழகத்தில் இருந்து நீட் தேர்வை எழுதிய மாணவர்களில், மாநில அளவிலான தரவரிசையில் ராஜன் என்ற மாணவர் 712 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் இவர் 8வது இடத்தை பிடித்துள்ளார். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இருந்து மொத்தம் 6 ஆயிரத்து 698 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 1615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளைப் பொறுத்த அளவில் 738 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 877 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 400 முதல் 500 மதிப்பெண்கள் வரை 15 பேர் பெற்றுள்ளனர். 500 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் நான்கு பேர். இந்நிலையில், தமிழக அளவில் திருப்பூரை சேர்ந்த நிதி உதவி பெறும் பள்ளியை சேர்ந்த வாசுகி என்ற மாணவி 580 மதிப்பெண் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.
காஞ்சிபுரம் செயின்ட் ஜோசப் பள்ளி
மாணவர் சக்திவேல் 532 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். அதேபள்ளியை சேர்ந்த நவீன் குமார் 522 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். 300 முதல் 400 மதிப்பெண்கள் வரை பெற்றவர்கள் 70 பேர். 300 முதல் 500 மதிப்பெண்கள் வரை பெற்றவர்கள் 89 பேர். அவர்களில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 73 பேர். அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 16 பேர். கடந்தாண்டை விட இந்த ஆண்டு தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிக இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகளை பொறுத்தளவில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் பயிற்சி அளித்ததில் மாற்றுத் திறனாளிகள் மூன்று பேர் அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.