பதினோராம் வகுப்பு தமிழ் மனப்பாடச் செய்யுள்

 யுகத்தின் பாடல்


 என் அம்மை, ஒற்றியெடுத்த

நெற்றிமண் அழகே!

வழி வழி நினதடி தொழுதவர்,

உழுதவர், விதைத்தவர்

வியர்த்தவர்க்கெல்லாம்

நிறைமணி தந்தவளே!

உனக்குப்

பல்லாண்டு

பல்லாண்டு

பல்லாயிரத்தாண்டு

பாடத்தான் வேண்டும்!

காற்றிலேறிக்

கனைகடலை,நெருப்பாற்றை,

மலைமுகடுகளைக் கடந்து

செல் எனச் செல்லுமோர் பாடலை

கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும்

காலத்தால் சாகாத தொல் கனிமங்களின்

உரமெலாம் சேரப்

பாடத்தான் வேண்டும்!

ஏடு தொடக்கி வைத்து என்னம்மை

மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த

விரல் முனையைத் தீயிலே தோய்த்து

திசைகளின் சுவரெலாம்

எழுதத்தான் வேண்டும்

எழுகின்ற யுகத்தினோர் பாடலை.

                                                  -சுவில்வரத்தினம்



நன்னூல் - பாயிரம்

 ஆக்கியோன் பெயரே வழியே எல்லை

 நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே

கேட்போர் பயனோடு ஆயன் பொருளும்

வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே.

காலம் களனே காரணம் என்று இம் 

மூவகை ஏற்றி மொழிநரும் உளரே.         


                       - பவணந்தி முனிவர்

              

காவியம்

 சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின் தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது.         

                      - பிரமிள்


குறுந்தொகை

அம்ம வாழி தோழி நம்மூர்ப்

பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ 

தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்

நன்றுநன் றென்னும் மாக்களோடு

இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே    

                      -வெள்ளி வீதியார்

புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே: முனிவிலர்!

துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர் : அயர்விலர்

அன்ன மாட்சி அனையர் ஆகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.                                                                                                             - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

பா வகை : நேரிசை ஆசிரியப்பா


புரட்சிக்கவி

சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு

       தேக்கிய நல் வாய்க்காலும் வகைப் படுத்தி

 நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்

       நிறை உழைப்பு தோள்கள் எலாம் எவரின் தோள்கள்?

கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்

   கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?

 பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்

      போய் எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சி?   

                                               -பாரதிதாசன்

 பாவகை : எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


தொலைந்து போனவர்கள்

தின்றேன் என்பாய் அணுஅணுவாய் - உனைத்

தின்னும் பசிகளுக் கிரையாவாய்

வென்றேன் என்பர் மனிதரெல்லாம் - பெறும்

வெற்றியிலே தான் தோற்கிறேன்

'நான் என்பாய் அது நீயில்லை - வெறும்

நாடக வசனம் பேசுகிறாய்

ஏன்? என்பாய் இது கேள்வியில்லை - அந்த

ஏன் என்னும் ஒளியில் உனைத் தொடு.              

                                          -அப்துல் ரகுமான்