Ad Code

தமிழகத்தில், பள்ளிகள், ஜனவரியில் திறக்கப்பட உள்ளன

தமிழகத்தில், கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள், ஜனவரியில் திறக்கப்பட உள்ளன. கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், தமிழகத்தில் மார்ச் முதல் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு, படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.



தமிழகத்தில், பள்ளிகளை தவிர, கல்லுாரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதுவும், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலும், நேரடி வகுப்புகளை நடத்த வேண்டிய தேவை உள்ளதாக, தனியார் பள்ளிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து, தமிழக பள்ளி கல்வி அதிகாரிகள், விரிவான ஆலோசனை நடத்தியுள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு விதிகள் உள்ளதால், சுகாதார துறையின் அனுமதி பெற்ற பின், ஜனவரியில் பள்ளிகளை திறக்கலாம் என, முடிவு செய்து உள்ளனர். இதற்கான அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகலாம்.

கூடுதல் ஆசிரியர்கள்

இதற்கிடையில், கொரோனா ஊரடங்கால், தொழில்கள் நலிவுற்று, வருமானம் குறைந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் இருந்து மாற்றி, அரசு பள்ளிகளில் சேர்த்தனர். இதனால், அரசு பள்ளிகளில், இந்தாண்டு ஐந்து லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில், தேவையின் அடிப்படையில், ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.

இதற்காக, தமிழகம் முழுதும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சேகரிக்க, இணை இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, இதுகுறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

காலியிடங்களின் பட்டியல் வந்ததும், உபரியாக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் இருந்து, தேவைப்படும் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

.adsbygoogle || []).push({});

Post a Comment

0 Comments

Ad Code