Ad Code

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிகமாக ரத்து – கல்வித்துறை ஆலோசனை!!

 தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிகமாக ரத்து – கல்வித்துறை ஆலோசனை!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை தற்காலிகமாக ரத்து செய்வது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொதுத்தேர்வு ரத்து:

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பின்னர் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக 10, 12ம் வகுப்புகளுக்கு நேரடி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டன. பின்னர் பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது பள்ளி, கல்லூரிகளில் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமடைந்ததால் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நாள்தோறும் 2000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்போது பள்ளிகளுக்கு வருகை புரிந்து வரும் 12ம் வகுப்பு மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களும் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


அதற்கான நான்கு கட்ட பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். மே 3ம் தேதி 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதற்காக மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொண்டு வருகின்றனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளே தேர்வு நடைபெற உள்ளதால் அதனை ஒத்திவைக்க வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை அரசு தற்போது வரை  ஏற்கவில்லை. இந்நிலையில் சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code